• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 3, 2023

சிந்தனைத்துளிகள்

எல்லாமே மனசுதான்

மின்சாரத்தை எப்படிக் கண்களால் பார்க்க முடியாதோ அதைப்போல மனசையும் பார்க்க முடியாது. உண்மையில் மனசு என்ற ஒன்றே இல்லை என்பதும் தெளிவு. ஆனால் மனிதனின் எல்லாச் செயல்களுக்குமே மனசுதானே ஆணிவேராக இருக்கிறது.
ஆயிரம் வாசல் இதயம் – அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் போவார் – வருவதும் போவதும் தெரியாது. கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் வரிகளைப் போலவே மனிதனின் மனதில் எத்தனையோ எண்ணங்கள் உள்ளே நுழைந்து வெளியே போகின்றன. சிலர் நல்லதையும் சிலர் தீயதையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதுபோலவே அவரது வாழ்வும் அமைகிறது. 
எந்நேரமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் தந்தைக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரில் மூத்தவரிடம் குடிப்பழக்கம் இருந்தது. இளையவரிடம் எந்தத் தீய பழக்கமும் இல்லாத நல்லவராக இருத்தார். மூத்த மகனைப் பார்த்து ஏன் எப்போதும் நீ குடித்துக் கொண்டே இருக்கிறாய் என்றபோது அவரோ என் தந்தையைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அந்தப் பழக்கம் வந்துவிட்டது என்றார். 
இளையவரிடம் நீ ஏன் குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்கிறாய் என்றபோது அவரோ என் தந்தையைப் பார்த்துப் பார்த்து நானும் அவரைப்போல் ஆகிவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றார்.
வாழும் சுழ்நிலையும் ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் இருவரின் மனசு மட்டும் வேறுபட்டிருக்கிறது. ஒருவர் தீயவராகவோ நல்லவராகவோ இருக்க அவரது மனசுதான் காரணமாக இருக்கிறது. மனதைப் பக்குவப்படுத்தப் பழகிக்கொண்டால் எந்தத் தீய எண்ணங்களும் மனதுக்குள் நுழைந்துவிடாதபடி மனசே மனசைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்பதுதான் சத்தியமான உண்மை. எனவே எவரும் எண்ணங்களை வலிமையானதாகவும் நல்லதாகவும் ஆக்கிக் கொண்டால் அதுவே நம்மைத் தானாகவே உயர்த்தும் சக்தி உடையதாக மாறிவிடும். நீ என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் என்றார் கவிஞர் கண்ணதாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *