• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 11, 2023

சிந்தனைத்துளிகள்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.
ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.
இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.
அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.
சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.
அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.
இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை.
ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்.
ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்.
அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்.
அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.
கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.
கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.
தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள்.
மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல.
அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.
இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.