• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 28, 2023

சிந்தனைத்துளிகள்

புத்தகம் என்ற சொல்லுக்கு, புத்தி அகம் என்று பொருள் கொள்வது நலம். புத்தகம் எழுதுவது என்பது பலருக்கும் கனவு!
அந்தக் கனவு பலருக்கும் கனவாகவே போய்விடும்! ஏனென்றால் அவர்களுக்குக் கனவுகாண நேரம் கிடைக்கும்!
அதை செயல்படுத்த நேரம் கிடைக்காது! சிலர் புத்தகம் எழுதுவதற்கென நேரம் ஒதுக்கி எழுதுவதும் உண்டு. சிலர் எண்ணிலடங்கா பக்கங்களை எழுதிக் குவித்துவிடுவதும் உண்டு.
அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும்..
“ கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான் ” என்று.
கண்டதை என்றால் கண்ணில் படும் எதையும் என்று பொருள் கொள்வதைவிட பயனற்ற பல நூல்களைக் கண்டு அதில் சிறந்த நூலைக் கண்டு அதைக் கற்றவன் பண்டிதனாவான் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.
நேரம் கிடைத்திருந்தால்…
நான் அதைச் செய்திருப்பேன், இதைச் செய்திருப்பேன் என நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் சொல்லியிருப்போம்..
பிரிட்டன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் 40 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதைப் படித்த ஒருவர், “ தாங்கள் இந்தப் புத்தகத்தை இன்னும் அதிக பக்கங்களில் எழுதியிருக்கலாமே… நேரம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில் அவர்கள், “எனக்கு இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இதையே நான் ஐந்து பக்கங்களில் சுருக்கி எழுதியிருப்பேன்” என்றார்.

இந்த எதிர்பாராத பதில் புத்தகம் எழுத விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேவையான அறிவுரையாகவே அமைகிறது.
நல்ல பேச்சு என்பது…
சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது மட்டுமல்ல!
எந்த வார்த்தை பேசக்கூடாது என்று உணர்ந்து பேசுவதே!
அதுபோல நல்ல நூல் என்பது..
சிறந்த கருத்தை தேர்ந்தெடுத்துச் சொல்வது மட்டுமல்ல!
தேவையில்லாத கருத்துக்களை எழுதாமல் இருப்பதும் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *