• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 15, 2023

சிந்தனைத்துளிகள்
மனநிறைவு:

வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.
புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்” என்பதே இந்த தியானத்தின் தாரக மந்திரம்.
அது எப்படி என்கிறீர்களா? உதாரணமாக, தாகம் எடுத்தால் நீர் குடிக்கிறோம். இதில் தாகத்தை மறந்து விடுங்கள். நீரை விட்டு விடுங்கள். மீதம் இருப்பதோ தாகம் தணிந்த மனநிறைவு. அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்.
உற்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சின்னச் சின்ன விஷயங்களில் மனநிறைவை உணர்ந்திடுவீர்கள். ஆனால் மனித மனம் எப்பொழுதும் எதிர்மறையாகவே நினைக்கிறது. தனக்கு நேரும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் பெரிதாக எண்ணி வருந்துகிறது. நண்பர்களுடன் உரையாடும் போதும் மகிழ்ச்சியாக இல்லாமல் வருந்திப் புலம்புகிறோம்.
துன்பமயமானது வாழ்க்கை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மை வேறு. எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. சிறு சிறு விஷயங்களில் கிடைக்கும் மன நிறைவை ஒதுக்காமல் முழுமையாக உணர்ந்திடுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்படுவதை உணர்வீர்கள்.
உங்கள் நண்பரைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? அதை முழுமையாக உணர்ந்திடுங்கள். “உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று நண்பரிடம் கூறுங்கள். பூவிலிருந்து வரும் நறுமணம் எங்கும் பரவுவது போல உங்களுடைய மகிழ்ச்சி, சந்தோஷம், மனநிறைவு உங்களின் வாய் வழியாக தொண்டை, இதயம் என உடல் முழுவதும் சென்று நிறைவதாக உணர்ந்திடுங்கள். மகிழ்ச்சியை முழுமையாக அனுபவியுங்கள்.

இதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் உலகமே புதுமையாக தெரியும். தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை சேகரித்திடுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.