மதுரை மாநகர் கே.கே.நகர் லேக்வியூ பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்((30). தேனி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் மகனான இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தனது கர்ப்பிணி மனைவியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது கோவில் வாசலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் அந்த பகுதியை சேர்ந்த மாணிக்கம் நகரைச் சேர்ந்த சமயமுத்து( 56), அவருடைய மகன் மணிகண்ட பிரபு( 25) ஆகியோரிடம் பழத்தட்டு வாங்கியபோது கோவில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக 30 ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நிஷாந்த் வாங்கிய பொருட்களில் வாழைப்பழம் அழுகியும், தேங்காய் உடைந்திருந்த நிலையில் வேறு தேங்காய், பழ தட்டு கொடுக்குமாறு கேட்டார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சமயமுத்துவும் அவரது மகன் மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது வீசியதாகவும் அப்போது கர்ப்பிணி மனைவி மீது தேங்காய் பட்டுவிடக்கூடாது என்பதற்காக கடைக்குள் சென்று அவர்களை தடுக்க சென்றபோது இருவரும் ப்ளாஸ்டிக் சேரால் தாக்கியதில் நிஷாந்தின் தலையில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நிஷாந்த் அளித்த புகாரின் பேரில் தெப்பகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி் சிறையில் அடைத்தனர்.