மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள நீரேததான், நரிமேடு, மேட்டுநீரேத்தான் மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் பெருமளவில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்துள்ளதுடன், மழைநீரில் நீண்ட நேரம் நனைந்த நிலையில் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. பல இடங்களில் நெற்பயிர்கள் அழுகி காணப்படுகிறது

இதனால், அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நெற்பயிர்கள் வளர்ப்பதற்காக பல்வேறு வங்கிகள் மற்றும் தனியாரிடம் கடன் பெற்று பெருமளவு செலவு செய்திருந்த நிலையில், தற்போது முதலீட்டுத் தொகையையே மீட்டெடுக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். வயல்களுக்குள் உள்ள மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் சில விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்பை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவாய் துறையினரை அனுப்பி பாதிக்கப்பட்ட நெற்கதிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு தமிழக அரசு கடன் உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்