விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி கொட்டமடக்கிபட்டி கிராமம். இக்கிராமத்தில் பசும்பொன்நகர் கண்மாய் உள்ளது. கண்மாய் ஐம்பது ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். இக்கண்மாய் நீரினை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, பயிரிட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக வரத்து கால்வாய் தூர்வாரப் படவில்லை, கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்துள்ளதால் மழை நீர் முழுமையாக தேங்க முடியாமல் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி விவசாயி ஆல்பர்ட் கூறியது.

கொட்ட மடக்கிபட்டி பசும்பொன் நகர் கண்மாய் வைப்பாற்றின் கரையோர பகுதியில் இருப்பதால் சிறிய மழை பெய்தாலும் கண்மாய் நிரம்பும். அப்போது நீரினை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம், பயிரிடப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்துள்ளதால் கண்மாய்க்கு தண்ணீர் வருவது குறைந்துவிட்டது.
விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் தேங்காதால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை தூர்வாரி ஆழப் படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.