மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார் மூன்று லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

நெல் விதையில் தவறு நடந்திருக்கும் எனவும் புகார் தெரிவிக்கும் விவசாயி வருவாய்த்துறை அதிகாரிகள் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாய நிலங்களில் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த நெற்ப்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பகுதியில் சுமார் 12 ஏக்கர் நெல் நடவு செய்த நிலையில் நெல்லுக்கு இணையாக நெற்பயிர்களின் நடுவே களைகளும் வளர்ந்துள்ளதாகவும் நெல் நடவு செய்த பிறகு மூன்று முறை இதற்காக மருந்து அடித்த நிலையில் களைகளை அழிக்க முடியவில்லை.
பயிர்களுக்கு இணையாக களைகளும் வளர்ந்து அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகி விட்டதாக கூறும் இவர் இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தும் நேரில் பார்க்க வரவில்லை என புகார் தெரிவித்துள்ளார். ஏக்கருக்கு சுமார் 30,000 என 12 ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் தற்போது நெற் பயிர்கள் அனைத்தும் களைகள் முளைத்ததால் அறுவடை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆகையால் நெற்ப்பயிர்களை நேரில் பார்வையிட்டு சேதமடைந்த நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதே போல் வடகரை கண்மாய் பாசனத்தில் நடவு செய்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வயல்களிலும் இதே போன்று களைகள் வளர்ந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் வருவாய் துறையினர் மற்றும் வேளாண்மை துறையினர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.