• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தேனியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்..,

ByAjmalkhan saleemraja

Oct 21, 2026

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதியின்படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி நேரு சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தவணை முறையில் கடன் தள்ளுபடி செய்வதை ஏற்க முடியாது என விவசாயிகள் வலியுறுத்தினர்.

எல்நினோ பாதிப்பு காரணமாக போதிய மழை பெய்யாமல், அணைகளில் நீர்மட்டம் குறைந்து முதல்போக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை “வறட்சி மாவட்டங்களாக” அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியாரமயமாக்கும் நடவடிக்கையான, விவசாய மோட்டார்களுக்கு ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டங்களை கைவிட வேண்டும்.

மேகமலை – வருஷநாடு பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வாழ்ந்து வரும் மக்களுக்கு எதிராகக் கூறப்படும் வெளியேற்றும் நடவடிக்கைகளை தடுத்து, 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பழங்குடி மக்களுக்கும் இதர சமூக மக்களுக்கும் நிலப்பட்டா மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

முன்னதாக, தேனி நேரு சிலை அருகே திரண்ட விவசாயிகள் சிறிது தூரம் நடைபயணமாக வந்து, சாலை நடுவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி. கண்ணன் தலைமை தாங்கினார். தேனி தாலுகா தலைவர் கே. பாஸ்கரன், பெரியகுளம் தாலுகா செயலாளர் சி. நாகராஜ், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் கே.எஸ். சந்திரன் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர். பெரியகுளம், தேனி மற்றும் ஆண்டிபட்டி தாலுகாக்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.