• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓர் ஆற்றின் இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையைக் கடக்க இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். முதல்நபர், ‘இந்த ஆற்றை நீந்திக் கடக்கத் தேவையான உடல் பலத்தைக் கொடு’ என்று கடவுளிடம் கேட்டார். உடல் பலத்தைக் கொடுத்தார் கடவுள். ஆனால் அந்த ஆளுக்கு நீந்தத் தெரியவில்லை. நீச்சல் பயிற்சி இல்லாமல் வெறும் உடல்பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்? தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.


இரண்டாவது நபர், ‘ஆற்றைக் கடந்து போவதற்கு எனக்கு ஒரு படகு தா’ என்று கடவுளிடம் கேட்டார். படகு வந்தது. அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அந்தப் படகில் ஒரு துவாரம் இருந்தது. தண்ணீர் உள்ளே வந்து, படகு கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கி விட்டார்.


மூன்றாவதாக அந்தப் பெண், ‘நான் அந்தக் கரைக்குச் செல்ல வசதியாக தண்ணீரே இல்லாமல் செய்துவிடு’ என்று சொன்னாள். தண்ணீர் வற்றிவிட்டது. நடந்து சென்று கரையைத் தாண்டினாள்.
இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், ‘எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித்தனமாக இப்படி நடந்துகொண்டாய்?’ என்று கேட்டார்.


‘எனக்கு முன்னால் இரண்டு பேர் செய்த தவறுகளில் இருந்து நான் படித்த பாடம் இது.
அந்த அனுபவம்தான் இப்படிப் புத்திசாலித்தனமாக என்னை செயல்பட வைத்தது’ என்று அந்தப் பெண் கூறினார்.


பிறர் செய்யும் தவறுகளில் இருந்து, நாம் கற்றுக் கொள்ளும் பாடம்தான் ஒரு சிறந்த அனுபவமாக மலர்கிறது என்பதை இக்கதை நமக்கு விளக்கிக் காட்டுகிறது.