அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் 2026-ம் ஆண்டு வருவதற்கு முன்பே அரசியல் கட்சியினர் பணிகளை துவங்கி விட்டனர். அதிமுக, திமுக போன்ற கட்சிகள் பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வேலைகளை செய்து வருகிறது. அத்துடன் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் பல்வேறு கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று கூறினார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்று பதிலளித்த அவர், “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என்று பதிலளித்தார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)