• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்-அமைச்சர் தங்கம்தென்னரசு

ByKalamegam Viswanathan

Apr 10, 2023

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சிவகாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு பல்நோக்கு சேவை மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் தங்கம்தென்னரசு சேவை மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,


தமிழ்நாட்டில் முதன் முறையாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், விவசாயிகளிடம் வாங்கிய பொருட்களை தனியார் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு வசதியாக இந்த சேவை மையம் செயல்படும். இதன் மூலம் இந்தப்பகுதி விவசாயிகளுக்கு சந்தை மதிப்பின்படி நல்ல விலை கிடைத்து, மிகுந்த பலன்களை பெறுவார்கள். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தின் மூலமாக, சுய தொழில் செய்து வரும் பெண்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்குச் சென்று வரும் பெண்கள் மிகுந்த பயன்களை அடைந்து வருகின்றனர். மேலும் சுயஉதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்ததுடன், புதிய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் சுயமாக தொழில்கள் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், திமுக கட்சி தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு பேசினார். நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.