சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, சைதாப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக, கடந்த மாதம் 13-ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதன் பின் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி கைது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் தி.மு.க அரசின் மற்றொரு முக்கிய அமைச்சர் பொன்முடி வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் எந்த குற்றத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.