• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Feb 6, 2023

நற்றிணைப் பாடல் 109:

ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று
அன்னவோ இந் நன்னுதல் நிலை என
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே

பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாலை

பொருள்:
“நாம் ஒன்று சேர்வோம்” என்று அவர் சொன்னார். அது பழமையான நட்பு. இந்த நட்புறவுடன் காதலர் சென்றுள்ளார். அதனால் கலக்கமுற்றுப் பித்தாகி, நெற்றி-நிறம் மாறிய நிலையில் இருக்கிறாயா, என்று கேட்கிறாய். அணிகலன்கள் புனைந்துகொண்டு, எனக்கும் புனைந்துவிடும் நல்லவளே, சொல்கிறேன் கேள். சொல்லமுடியாத அளவுக்கு வாடைக்காற்று-தான் என் துன்பத்தை ‘இம்’ என்று வாரி இரைக்கிறது (தூற்றுகிறது). இருளில், வாடைக்காற்று வீசும் நீர்த்துளியில், தலையில் கூழைக் கயிற்றால் கட்டிப் பிணிக்கப்பட்டிருக்கும் பசு வருந்துவது போல நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். பகல் முடிந்த பொழுதில் தனியே இருக்கிறேனே! என்ன செய்வேன் என்று தலைவி தன் தோழியிடம் தன் கலக்கத்துக்குப் புது விளக்கம் தருகிறாள்.