கோடைவெயிலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாட்டினால் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து தேவை அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மின் தேவை தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. “தமிழகத்தில் மின் தேவை 20,000 மெகா வாட் மைல்கல்லை கடந்து, நேற்று முன்தினம் ஏப்ரல் 8ம் தேதி மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை 20,125 மெகா வாட் உச்சபட்ச தேவை பதிவாகியுள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் தேதி மாலை உச்சபட்ச தேவை 19,580 மெகா வாட் என பதிவாகியிருந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து தனது நுகர்வோருக்கு நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்து வருகிறது” என்று மின்சார வாரியம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.