சென்னையில் வருகிற ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இளைஞர்களின் தேர்தல் பங்கேற்பை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல்முறை வாக்காளர்களுக்கு விநாடி – வினா போட்டி நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு பயிலும் கல்லூரி மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
அதேபோல், தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ரிப்பன் மாளிகையில் விநாடி வினா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 2 முதல் 3 நபர்கள் (குறைந்தது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு நபர்கள்) பங்கேற்கலாம். இவ்விரு போட்டிகளும் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.
போட்டியில் பங்கேற்க ஆர்வமுடைய மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்கள் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணை பழயடஙரணை;பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த போட்டியில் பங்கேற்க இணையவழியில் பதிவு செய்வது அவசியமாகும். முதல்நிலை போட்டியானது இணைய வழியில் நடைபெறவுள்ளதால் அனைவரும் செல்போன் மூலமே பங்கேற்க இயலும். தேர்தல் நடைமுறை மற்றும் பொது அறிவு சார்ந்து விநாடி – வினா போட்டிகள் நடைபெறும். இதற்கு அனுமதி இலவசமாகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். போட்டி குறித்து எழும் சந்தேகங்களுக்கு 9840927442 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.