கோவையில் தனியார் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்து உள்ளது.
கோவை காந்திபுரத்தில் இருந்து கோவைப்புதூர் நோக்கி S17 எண் கொண்ட தனியார் பேருந்து இன்று சென்று கொண்டு இருந்தது. இந்தப் பேருந்தில் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்ற மூதாட்டி பயணம் செய்து உள்ளார். அந்த பேருந்து கோவைப்புதூர் பகுதியை நெருங்கிய போது, பேருந்தின் படிக்கட்டு அருகே இருந்த காமாட்சி, பேருந்து வளைவில் திரும்பும் போதோ அல்லது வேகத் தடையைக் கடக்கும்போதோ நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்து உள்ளார்.
இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதால், நிலைதடுமாறிய மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த விபத்தைக் கண்ட அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாகப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தனியார் பேருந்துகள் நேரக் கட்டுப்பாட்டைக் (Timing) கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தேவையற்ற வேகத்தில் இயக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.
”குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஓட்டுநர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதைத் தடுக்கக் கதவு வசதி கொண்ட பேருந்துகளை உறுதி செய்ய வேண்டும்” எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பேருந்துகளில் பயணம் செய்யும் போது எப்போதும் இருக்கைகளில் அமர்ந்து அல்லது கம்பிகளைப் பிடித்துப் பாதுகாப்புடன் பயணிக்கவும். நகரும் பேருந்தில் ஏறுவதையோ, அல்லது இறங்குவதையோ தவிர்க்கவும்.




