வீட்டிற்குள் புகுந்து மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் முதியவரை கொலை செய்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் மாண்டியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபூர் தாலுகா காடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(60). இவருக்கு யசோதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இரவு மரம் வெட்டும் இயந்திரத்துடன் அடையாளம் தெரியாத நபர் ரமேஷ் வீட்டிற்கு வந்தார். இந்த இயந்திரத்தை பதிவு செய்திருப்பதாக அவர் கூறினார். ஆனால், தாங்கள் யாரும் இந்த இயந்திரத்தை வாங்க பதிவு செய்யவில்லை என்று யசோதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், யசோதாவை தாக்கியுள்ளார். அத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ரமேஷ் கழுத்தில் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து அறுக்க ஆரம்பித்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த யசோதா, உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடினார். அத்துடன் வீட்டை பூட்டி அப்பகுதி மக்களை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த நபர், மரம் வெட்டும் இயந்திரம் மூலம் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்குள் கிராம மக்கள் திரண்டு அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரமேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த தகவல் அறிந்த ஸ்ரீரங்கப்பட்டினம் ஊரக போலீஸார் விரைந்து வந்து கொலையாளி கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த அவரை தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் படுகாயமடைந்த யசோதாவை மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கப்பட்டினம் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து முதியவரை மரம் வெட்டும் இயந்திரம் மூலம் மர்மநபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.