கான்பூரில் முதியோர்களுக்கு டைம் மிஷின் மூலம் புத்துணர்ச்சி அளிக்கிறோம் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இணைய மோசடி, டிஜிட்டல் மோசடி, ஆன்லைன் கேமிங் ஆப் போன்ற தளங்களில் இருந்து பல மோசடி செயல்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் கான்பூரில் வந்த மோசடி வழக்கு நாட்டிலேயே முதல் முறையாகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜீவ் குமார் – ரஷ்மி துபே தம்பதியினர் இஸ்ரேலிலிருந்து வரவைக்கப்பட்ட டைம் மிஷின் மூலம் முதியவர்களை 25 வயது இளமையாக்குவதாகக் கூறி ஒரு சிகிச்சை மையத்தைத் திறந்துள்ளனர். இதன் மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும். மேலும் ஐந்து நாட்களுக்கு ‘ஆக்சிஜன் தெரபி’ சிகிச்சையை எடுத்துக்கொண்டால் இளமையாக மாறிவிடலாம் என்று கூறி விளம்பரம் செய்துள்ளனர். இந்த தெரபிக்கு 10 அமர்வுகளுக்கு ரூ.6 ஆயிரம் எனக் கட்டணம் வசூலித்துள்ளனர்.
மேலும் 3 வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் சிறப்புச் சலுகை என்றும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.புதியதாக இந்த தெரபில் சேர்பவர்களுக்குப் பரிசுத் தொகையும் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இளைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் முதியவர்கள் சிலர் இந்த ‘ஆக்சிஜன் தெரபி’ சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பின்னர்தான் இது மோசடி என்று அவர்களுக்குத் தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேணு சிங், தன்னை ரூ.10.75 லட்சம் வரை ஏமாற்றி விட்டதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.35 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் நூதனமாக மோடி செய்து தலைமறைவாகியுள்ள தம்பதியை காவல் துரையினர் தேடிவருகின்றனர்.

திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு மோசடியில் ஈடுப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.








