• Wed. May 1st, 2024

வாக்குச்சாவடி முகவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

Byவிஷா

Apr 18, 2024

அதிமுக முகவர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம், ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
எனது இந்த சுற்றுப் பயணத்தின் போது, மக்களைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் கோடானு கோடி மக்கள் திரண்டிருந்து, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே, முரசு சின்னத்திற்கே என விண்ணதிர முழக்கமிட்டது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கட்சியின் உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும்.
மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும்.
வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும்.
எனதருமை வாக்காளப் பெருமக்களே, அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை’ சின்னத்திலும், தே.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *