• Wed. May 1st, 2024

கோவை டீக்கடையில் பணப்பட்டுவாடா செய்த பாஜக

Byவிஷா

Apr 18, 2024

கோவையில் டீக்கடை ஒன்றில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வர, உடனே அவர்கள் விரைந்து சென்று வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை கைப்பற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பறக்கும் படையினருக்கு அனுப்பப்பட்டது. தகவலின் அடிப்படையில், துணை மாநில வரி அலுவலர் புஷ்பா தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் காளீஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பூலுவபட்டி மாரியப்பன் டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர். தொடர் சோதனையில், ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை கைப்பற்றியதுடன், பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர். மேலும், பிடிக்கும் பொழுது வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பையும் கைப்பற்றினர்.

பணம், வாக்காளர்கள் விவரம் பறிமுதல் செய்யப்பட்ட பாஜகவை சார்ந்த ஆலாந்துறை மண்டல் தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *