• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் ஆட்சியில் நீட்டை ஆதரித்தது திமுக – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

Byகுமார்

Aug 21, 2023

கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக சார்பாக சுகாதாரத்துறை மத்திய இணையமைச்சராக இருந்த காந்தி செல்வன், நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.

மதுரையில் அதிமுக சார்பாக பொன்விழா மாநாடு மதுரை மாவட்ட வலையங்குளம் அருகே இன்று நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர அதிமுக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றினார். பிறகு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், கவியரங்கம், இன்னிசைக் கச்சேரி மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 4.00 மணியளவில் மாநாட்டு மேடையில் பொதுக்கூட்டம் தொடங்கியது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு, திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அங்கீகரித்தல், தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சிமொழியாக்குதல், புதுச்சேரியை மாநில அங்கீகரித்தல், மகளிர் உரிமைத்தொகைக்கு கட்டுப்பாடுகள் விதித்ததைக் கண்டித்தல், கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசைக் கண்டித்தல், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்தல், மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

பிறகு மாநாட்டு உரை நிகழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களைக் குறிப்பிட்டு விளக்கிப் பேசினார். நீட் விவகாரத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளைத் திமுக தந்ததாகக் குற்றம்சாட்டிய அவர், கடந்த 2011-ஆம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், நீட்டைக் கொண்டு வர முயன்றபோது, சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த திமுகவின் காந்தி செல்வன் ஆதரித்தது ஏன்? எனவும், இன்று உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் குற்றம் சாட்டினார்.

திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் வரையும்கூட கொண்டு சென்று வழக்கை அதிமுக நடத்தும் என்றும், அதிமுகவைப் பொறுத்தவரை தலைமைக்கு விசுவாசமாக இருக்கின்ற அடிமட்டத் தொண்டர்களும்கூட உயர் பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு. அதிமுக என்ற கட்சி வளர்வதற்கு தொண்டர்களே மிகப் பெரும் அடித்தளமாக இருக்கிறார்கள் என்றும் இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் 15 லட்சம் பேர் வருகை தந்துள்ள சாதனை படைத்த மாநாடு என்றும் பேசினார். முன்னதாக சர்வ சமயப் பெரியவர்களால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. தலைமைக் கழகப் நிர்வாகிகள் வேலுமணி, ராஜலட்சுமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலர் பேசினர்.

மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்ற இந்த மாநாடு, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் மதுரையைக் கடந்து தென்மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.