திமுக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் கனமழை நீடித்தது. இந்த நிலையில் மழை நீர் காரணமாக சென்னையின் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் இணைந்து சென்னையில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “சென்னையில் இன்று வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட நான்கு இடங்களில் நான் ஆய்வு மேற்கொண்டேன். கோடம்பாக்கம், கே.கே.நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தோம். இப்பகுதிகளில் முழங்கால் வரை தண்ணீர் இருந்தது. இதுவரை எந்த அதிகாரியும் இங்கு வரவில்லை என்று சம்பந்தப்பட்ட மக்கள் புகார் கூறுகிறார்கள். இங்கு குழந்தைகளுக்கு பால் இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டு இங்குள்ள மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.நான் பார்வையிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழிவு நீரும், மழை நீரும் கலந்துள்ளது. எனவே திமுக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு எங்கு எல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறதோ அங்கு எல்லாம் மின் மோட்டார் அமைத்து தண்ணீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மழை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி…
