• Fri. Apr 26th, 2024

போதை மருந்து கடத்தலை
தடுக்க கடும் நடவடிக்கை:
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் கடந்த 12-12-2022 அன்று சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக, இந்த போதை பொருட்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் தனசேகர் ஆகிய 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரை உள்ள அத்தனை சோதனைச்சாவடிகளையும் கடந்து, எந்தவித தடையுமின்றி சுமார் ரூ.160 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் மண்டபம் வந்தது எப்படி? என்று மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ஆச்சரியப்படுகின்றனர். ஒரு சில உயர் அதிகாரிகளின் துணை இல்லாமல் இந்த கடத்தல் நடந்திருக்க முடியாது என்ற சந்தேகம் இச்செய்தியை படிக்கும் அனைவரிடமும் எழுந்துள்ளது.
எனவே, இந்த தி.மு.க. அரசின் காவல் துறை, போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கை காக்கும் வேலையை பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார். தற்போதைய இந்த அவலம், நிர்வாக திறனற்ற தி.மு.க. ஆட்சியில் தொடருமேயானால், தி.மு.க. குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து, ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பார்கள் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *