விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் இன்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மீட்பு பணிக்காக தனியார் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்திருந்தன. பட்டாசு ஆலையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் யாருக்கும் எந்த காயமோ ஏற்படவில்லை என்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்தப் பரபரப்பை பயன்படுத்திய மடத்துப்பட்டி ராஜீவ் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிமுத்து வயது 30 என்ற இளைஞர் கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். இவர் திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துக் கொண்டு அப்பகுதியை விட்டு கிளம்பியுள்ளார்.
போதையில் நிலை தடுமாறி ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் கூட்டத்தில் செலுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் சுதாரித்து கொண்டு வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த வரை வெளியே கொண்டு வந்து விசாரணை செய்ததில் அவர் போதையில் இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவரை பிடித்து அருகில் இருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அறிந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் பதறி அடித்து ஓடி வந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை கைப்பற்றி எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போதை ஆசாமியான மாரிமுத்துவை வெம்பக்கோட்டை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.