• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் திரும்பிய போது விபத்து ஓட்டுநர் பலி 6 பேர் படுகாயம்..

ByKalamegam Viswanathan

Mar 20, 2025

மதுரை அழகர்கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் திரும்பிய போது சாலை நடுவில் பஞ்சராகி நின்ற சரக்கு லாரியின் மீது மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி – குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். பின்னர், அழகர் கோவில் செல்வதற்காக தத்தனேரி பகுதியில் உள்ள வாடகை கார் நிறுவனம் மூலமாக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

இந்த வாடகை காரை மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்ற ஓட்டுனர் ஓட்டிசென்றுள்ளார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை நோக்கி காரில் திரும்பியுள்ளனர். அப்போது மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் மீது கார் வேகமாக வந்து கொண்டிருந்தபோது பாலத்தில் நடுவே செங்கல் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று பழுதாகி நின்றுள்ளது.

அதனை கவனிக்காமல் லாரி மீது கார் வேகமாக மோதியதில் கார் முழுவதுமாக நொறுங்கியது இந்த விபத்தில் கார் ஓட்டுநரான மதியழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காரில் பயணித்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு காரில் பாதுகாப்பு பலூன் இருந்து வெளியில்வந்த நிலையிலும் ஓட்டுநர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கார் நொறுங்கியதால் ஓட்டுனரின் உடல் காருக்குள் சிக்கிய நிலையில் தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலானது மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் கார் சரக்கு லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்து காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.