பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக ஒரு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்ற கால்வாய் மூடியை திறந்தும் , உடைத்தும் கழிவுகளை அள்ளி பள்ளி நுழைவு வாயில் பகுதியை ஒட்டியே சாலையில் கொட்டப்பட்டுள்ளது. பல நாட்கள் ஆகியும், இந்த கழிவுகளை அகற்றாமல், கால்வாய் மூடியை மூடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி நுழைவு வாயில் பகுதி மிகவும் அருவருக்கத்தக்க நிலையில் காணப்படுகிறது. பள்ளி நுழைவு வாயில் பகுதியில் மூடி திறக்கப்பட்டு மூடாமல் காணப்படும் கழிவு நீர் கால்வாயில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்து அல்லது ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் பள்ளி நுழைவு வாயில் பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், பெரம்பலூர் ஒன்றிய நிர்வாகத்திற்கும், செங்குணம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ,மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
