கொடைக்கானலில் முதன் முறையாக வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் நடைபயணமாக வெள்ள கெவி சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும்… கொடைக்கானல் நகர் பகுதி பெரும் சுற்றுலா பகுதியாக இருக்கக்கூடிய நிலையில் கொடைக்கானலில் பல்வேறு வரலாற்று சுவடுகளும் மறைந்து இருக்கின்றன .
இதில் முக்கிய இடம் பெறுவது கொடைக்கானலில் கடைக்கோடி கிராமமாக இருக்கக்கூடிய வெள்ளை கெவி என்ற கிராமம் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு சாலை வசதிகள் தற்போது வரை இல்லாததால் மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு கூட குதிரைகள் மூலம் பயணப்பட்டு தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்று வந்த நிலையில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு கூட வெள்ளை கெவி கிராமத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் நடைபயணமாக வட்டக்காணல் என்ற பகுதிக்கு வந்து அவர்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்கி சென்ற நிலையில் இருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக கொடைக்கானல் நகராட்சி சார்பாக, வெள்ளை கெவி கிராமத்திற்கு ரேஷன் பொருட்களை நேரில் சென்று வழங்கப்பட்டது.
மேலும் அதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், வருவாய்த்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் நடைபயணமாக வெள்ள கெவி கிராமத்திற்கு நடைபயணமாக சாலையை ஆய்வு செய்து சாலைகள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் அனைத்தையும் பார்ப்பதற்கும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கண்டறியவும் இன்று கிளம்பினார்கள் .
மேலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சரவணன்.., தற்போது அந்தப் பகுதியில் ஒரு சாலை மற்றும் ஒரு உயர் மட்ட பாலம் வர இருப்பதாகவும், இதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது சுட்டிக்காட்டி, அதனை மேற்பார்வை இடுவதற்காக செல்வதாகவும், இதில் மீதமுள்ள எட்டு கிலோமீட்டர்-க்கு வனப்பகுதி வருவதால் அதில் 12 ஹெக்டேர் அளவிற்கு நிலம் எடுப்பது தொடர்பாக வனத்துறை அலுவலர்களுடன் செல்வதாகவும், அந்த கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை கண்டறியவும் இன்று இந்த பயணம் துவங்கியுள்ளது என்று தெரிவித்தார்.