அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர் பதவியேற்பதற்கு முன் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை குடியரசு தலைவராக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர்கள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் நிகழ்ச்சியில் பேசுகையில், ” அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம். அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளோம். செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம்.
பலம் வாய்ந்த, சுதந்திரம் நிறைந்த மற்றும் நம்பிக்கையான நாட்டை உருவாக்குவதே என்னுடைய நோக்கம். இதற்கு முன்பு எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த நொடி முதல் அமெரிக்காவில் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலையை அறிவிக்கப்படுகிறது.அமெரிக்க எல்லையையொட்டிய மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக பலர் அமெரிக்காவுக்குள் ஊடுருவி வருகிறார்கள். சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் நிறுத்தப்படும். சட்டவிரோத வகையில் குடியேறிய அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
மெக்சிகோ வளைகுடா என்பது இனி அமெரிக்க வளைகுடா என்று அழைக்கப்படும். ஜோ பைடனால் எல்லை பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. இயற்கை பேரிடர்களை பைடன் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அமெரிக்காவில், ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும். ராணுவத்திற்கு நாட்டை பாதுகாப்பதே இனி கடமையாக இருக்கும்.
உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது. அமெரிக்க ராணுவம் வலிமை பெற்ற ஒன்றாக கட்டமைக்கப்படும். நோய்களில் இருந்து குழந்தைகளை காப்போம். இனி மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும். மக்கள் அவர்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.
சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும். அமெரிக்கா வளர்ந்து வரும் நாடாக உள்ளது. அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்குவோம். வளங்களை அதிகரிக்கக் கூடிய நாடாக அமெரிக்காவை மாற்றுவோம். உலகிலேயே மதிக்கப்படும் நாடாக அமெரிக்கா மீட்டெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்