• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து விலை உயர்ந்த மருந்துகளை எடுத்துச்செல்லும் டாக்டர்கள்

அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதாகவும், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கூறியுள்ளார்.
கோவை அரசு ஆஸ்பத்திரி மருந்து கிடங்கு பொறுப்பாளராக பணியாற்றிய முத்துமாலை ராணி, அளவுக்கு அதிகமாக மருந்தை கொள்முதல் செய்ததாக கூறி, அவரது ஓய்வூதியத்தை அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கொரோனாவை தொடர்ந்து பல புதிய நோய்கள் எல்லாம் பரவுகிறது. இதற்கு என்ன காரணம்? மருந்துகளை விற்பனை செய்ய மருந்து நிறுவனமே நோயை பரப்புகிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடந்த 30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்மயமாகுதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வனம் அழிப்பு, மனிதர்களின் சமூக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாக தான் புதிய நோய்கள் பரவுகிறது. பருவநிலை மாற்றம், வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் கரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுகிறது. நோய் தொற்றியவர்களை கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பலாமே? இதுசம்பந்தமாக உரிய நடைமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் காலாவதியான மருந்துகள் வழங்கவில்லை என்று அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் நீதிபதி கூறியதாவது:- நான் வக்கீலாக இருந்த போது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பரிந்துரைத்த மருந்து இல்லை என்று நர்சு கூறினார்.
பிறகு டாக்டர் வலியுறுத்திய பின்னரே, அந்த மருந்து எனக்கு வழங்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதிகளை அரசு உருவாக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.