• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அனைத்தையும் சுமக்காதே!

Byவிஷா

Dec 14, 2021

ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், “என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?”என்று கேட்டார்.


பதிலுக்கு அந்தப் பெண், “நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்” என்று கூறி வருந்தினாள்.


“கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்” என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.


திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ”ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?” என்று கேட்க, அதற்கு அவர் ”நாம் ஒரு துறவி என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?” என்று கேட்டார்.


உதவி செய்த துறவி, “தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்”என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.


நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம், எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால், வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.