ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “ கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படும் போதே ஆளுநர் வெளியேறினார். அது கிரிமினல் குற்றம். ஆளுநர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்.
முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்த்து வயிற்றெரிச்சலில் ஆளுநர் பேசுகிறார். சட்டமன்ற மரபுகளை அவமதித்த ஆளுநரை கண்டிக்கிறோம்
தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரை கண்டிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.