• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்

Byவிஷா

May 3, 2025

வருகிற ஜூன் 1ஆம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (மே.3) காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்: 1 – முதல்வருக்கு பாராட்டு – தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பி – சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும் – ஒன்றிய அரசுக்கும் உணர்த்தி – தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக ஆளுநரின் கையெழுத்தின்றி உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தனது சட்டப் போராட்டம் மூலம் பெற்று, ஆளுநர் அடாவடியாக நிறைவேற்ற மறுத்த பத்து மசோதாக்களைச் சட்டமாக்கி சகாப்தம் படைத்து, “சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே” – “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே – நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பின் மூலம், இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

மேலும், ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் துணையாகச் செயலாற்றி வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வாழ்த்தும் – பாராட்டும் – நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 2 – சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் – முதலமைச்சர், நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவரது உள்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் தெரிவித்தபடி, வளர்ச்சி சார்ந்த எந்த ஓர் இலக்காக இருந்தாலும் அதில் இந்திய ஒன்றியத்தின் சராசரியைவிட தமிழ்நாடு கூடுதலான அளவில் முன்னேறியிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் – 224 பகுதிகள் – 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திடுவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம்: 3 – கூடல் மாநகரில் ஜூன் 1-ல் பொதுக்குழு கூட்டம்: நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தில், 75 ஆண்டுகளைக் கடந்து தமிழ் மக்களுக்கான சமுதாய – அரசியல் பணிகளைச் சளைக்காமல் மேற்கொண்டு, நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத தேசிய சக்தியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கிறது.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி – தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமத்துவம், சமூகநீதி, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் காக்கும் மாபெரும் இயக்கமாக முன்வரிசையில் நிற்கும் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று இம்மாவட்டச் கழக செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 4 – பாஜகவின் பழிவாங்கும் அரசியலை சட்டத்தின் துணை கொண்டு எதிர்கொள்ளும்: நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறிக் குறுக்கிட்டு – அந்த அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறித்து வருவதோடு – திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் செய்து – அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சிபிஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதன் விளைவாக இன்று உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அமைப்புகளை ஆளாக்கி, அதிமுக போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க ஒன்றிய பாஜக அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை “பழிவாங்கும் நடவடிக்கை” எனக் கூறிய அமலாக்கத் துறையைப் பார்த்து; இப்போது டெல்லி உயர் நீதிமன்றமும், மாண்பமை உச்ச நீதிமன்றமும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதையும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய பா.ஜக அரசு பயன்படுத்துவதை திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் துணைக் கொண்டு துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஏற்கெனவே முதல்வர் சொன்னபடி, அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் – அவர்கள் எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும் – மக்கள் மன்றத்தில் ஒன்றிய பாஜ. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறாக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.