• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மகனுக்காக தடம் மாறுகிறாரா இயக்குனர் தங்கர்பச்சான்!

தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின்பு ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘களவாடிய பொழுதுகள்’ போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான். 2017க்கு பின் பிறகு தற்பொழுது ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தினை இயக்கி முடித்திருக்கிறார்

பி.எஸ்.என்.என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் தனது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் தங்கர்பச்சான். நடிகர் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவ பாஸ்கரன், படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை இயக்கம் – சக்தி செல்வராஜ், நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – ஸ்டன்ட் சில்வா.

இதுவரையில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை தந்து கொண்டிருந்த இயக்குநர் தங்கர்பச்சான். இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றி நடைபெற்றுள்ளது. படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இளைஞர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் பாடல் வரிகளை வித்தியாசமாக எழுதி அனைவரையும் கவர்ந்துள்ளார் தங்கர்பச்சான்.

“தக்கு முக்கு திக்கு தாளம்
போடப் போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
மாத்தப் போறன்டா!
சில்லாக்கி பில்லாக்கி சீனாக் குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப் புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!..

என்று தங்கர்பச்சான் எழுதிய இப்பாடல் வெளியானவுடனேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கர்பச்சானா இப்படி ஒரு பாட்டை எழுதினார் என்று வியந்து கேட்கிறார்கள். இப்பாடலை , பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் தேவா, தனது காந்தர்வ குரலால் பாடி அசத்தியுள்ளார். செம குத்து பாடலாக தரண்குமார் இசை அமைத்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் 2022 கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.