திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி மற்றும் மாணவர்களின் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் சேர்மன் லயன் ரத்தினம். தலைமை வகித்து பேசினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் வாணி முன்னிலை வகித்தார். கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் செயலாளர் சங்கீதா வரவேற்று பேசினார். இதில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவரும், ஐ.எம்.ஏ ஒட்டன்சத்திரம் கிளை செயலாளருமான டாக்டர்.ஏ.ஆசைத்தம்பி கலந்துகொண்டு குழந்தைகளின் மத்தியில் சர்க்கரை நோயின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள், உணவு முறைகள், தன் சுத்தம், உடற்பயிற்சியின் அவசியம், பற்களின் ஆரோக்கியம் அயோடியன் கலந்த உப்பை பயன்படுத்துவதின் நன்மைகள் குறித்து கருத்துரை வழங்கி விழிப்புணர்வு வினாடி வினா போட்டிகளை நடத்தினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவி நந்தனா, மாணவர்கள் ஹரி பிரகாஸ், ராகவன் ஆகியோர்களுக்கு இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 200- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளியின் முதல்வர் கௌசல்யா தேவி நன்றி கூறினார்.





