வீட்டு கடன் வழங்கும் தனியார் நிறுவனமான டி.எச்.எப்.எல். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.34,000 கோடியை மோசடி செய்து கடனாக பெற்றது என்பது வழக்கு. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் இயக்குனர் தீரஜ் வாத்வான், 2022ல் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது இவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தற்போது சிபிஐ அதிகாரிகளால் தீரஜ் வாத்வான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட தீரஜ் வாத்வானை சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 17 வங்கிகளில் ரூ.34,000 கோடியை மோசடியான முறையில் கடனாக பெற்றது இந்தியாவில் அரங்கேற்றப்பட்ட மிகப்பெரிய வங்கி மோசடியாக பார்க்கப்படுகிறது.





