பழனி மலை கோயிலில் விடுமுறை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடிமுடி தீர்த்தக்காவடியுடன் சுவாமி தரிசனம் செய்து குவிந்தனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தொடர் விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலிலேயே பக்தர்கள் கூட்டம் குவிந்தது. பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்ற நிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த காவடி, சர்க்கரை காவடி எடுத்து வந்து தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர். கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கூட்டம் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆனது. அடிவாரம் பகுதியில் ரோப் கார், விஞ்ச் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மலைக்கோயில் பக்தர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு இலவசமாக தயிர் சாதம் வழங்கப்பட்டது. மேலும் வெளிப்பிரகாரத்தில் மேட் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டது பக்தர்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகளை திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.