மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், குழுத்தலைவர் / மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் மூலமாகவும், ஒன்றிய அரசின் மூலமாகவும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்று சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாகவும், விரைவாகவும் சென்றடைகின்ற வகையில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை ஆய்வு செய்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தின்போது பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் பொருண்மைகள் அடுத்து நடத்தப்படும் இக்கூட்டத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்படும். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மதுரை மாவட்ட மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றி வருகின்றோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதோடு, அத்திட்டங்களின் பயன்கள் மக்களை சென்று சேருவதில் தேக்கநிலை இருக்கும் பட்சத்தில் அவற்றையும் சரி செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றி கொண்டிருக்கின்றோம். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட குறைகளையெல்லாம் அந்தந்த துறைகளின் அலுவலர்கள் உடனடியாக அக்குறைகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், குழுத்தலைவர் / மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக சென்று சேருகிறதா என்பதை ஆராய்வதற்காக இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைப்பாகும். தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமர்வில் அமர்ந்து அரசின் திட்டங்கள் குறித்தும், அமலாக்கம் குறித்தும், செயலாக்கம் குறித்தும் விவாதிப்பது என்பது ஜனநாயகத்தின் முக்கியமான செயலாகும். அந்த அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மிகுந்த பொறுப்புணர்வோடு, அக்கறையோடு, பலருடைய ஈடுபாட்டுடன், சரியான முன் தயாரிப்போடு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் நோக்கம் என்ன சொல்கிறதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் அந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதா, திட்டம் தேர்வு செய்யப்படுகிறதா, சரியான பயனாளிகள் தேர்வு செய்யபடுகிறார்களா, திட்டததை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாட்டத்தில் சாலை இணைப்பு இல்லாத கிராமமே இல்லை என்ற தன்னிறைவை நாம் அடைந்திருக்கிறோம். அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பு இருக்கிறது. தமிழ்நாடு ஒன்றிய அரசின் திட்டங்களால், நிதிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது என்பதற்கு கிராமப்புற சாலைகளின் நிதி முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக கிராமங்களில் புதிய சாலை அமைக்க பல ஆயிரம் கோடிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கிராமங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவு. மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமம் கூட இல்லை. எனவே இந்த திட்டத்தின் நிதி முழுவதையும் உத்திரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற வடஇந்திய மாநிலங்களே பயன்படுத்துகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் இத்திட்டத்தின் நிதியை பயன்படுத்த முடியாதபடி இத்திட்டத்தின் விதிகள் இருக்கின்றன.
இன்றைக்கு பிரதமந்திரி கிராம சாலை திட்டத்தில் புதிய சாலை ஒன்றுகூட தேர்வுசெய்ய முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். அதற்கு பதிலாக வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகளை புனரமைப்பதற்கு இந்த நிதியை பயன்படுத்தும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக சொல்வதென்றால் அரசு இராஜாஜி மருத்துவமனை இடநெருக்கடியால் தினறிக்கொண்டிருக்கிறது. அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கூடுதலாக இடவசதி செய்துதர பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் இருந்த பகுதியை பொது சுகாதாரத்துறைக்கு வகைமாற்றம் செய்ய எடுத்த முடிவை நடைமுறைபடுத்துவதற்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
மதுரையில் நடைபெற்றுவரும் மேம்பால பணிகளால் மக்கள் கடுமையான நெருக்கடிக்கும், சிரமத்திற்கும் ஆளாகின்றனர். எனவே மேம்பால பணிகளை விரைவுபடுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் பாலம் அமைக்கும் பணியின் போது கண்மாயின் உள்பகுதியில் போடபட்ட மண்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். வேளாண்துறை விதைகளை கொடுப்பதில் தாமதம் எற்படுகிறது என விவசாயிகள் சுட்டிகாட்டினார்கள். தற்போது அவையெல்லாம் களையப்பட்டு உரிய காலத்தில் பருவமழை துவங்குவதற்கு முன்பு விதைகள் கொடுக்கப்பட உள்ளதை உறுதி செய்திருக்கிறோம். வில்லாபுரத்தில் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் செய்து தரும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மதுரை கிளையை மாவட்ட ஆட்சியரகத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வந்திருக்கிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், குழு இணைத்தலைவர் /தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் குழு இணைத்தலைவர் /விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பா.மாணிக்கம் தாகூர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.அரவிந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), பி.அய்யப்பன் (உசிலம்பட்டி), மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.