கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் இந்துத்துவ அமைப்புகள், மடாதிபதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேட்டியளித்த எச்.ராஜா, வங்க தேசத்தில் புதிய அரசு அமைந்தவுடன் இந்துக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், இனப்படுகொலை நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார். அங்கு காளி கோவில், இஸ்கான் கோவில் போன்றவை கொளுத்தப்பட்டுள்ளது எனவும், இந்துகளின் வர்த்தக ஸ்தாபனங்கள் சேத படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்து மக்களை ஒருங்கிணைத்த இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மயி கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரை வெயிலில் எடுக்க முயற்சி செய்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவருக்காக முஸ்லிம் வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் பெட்டிசன் போடக் கூடாது என பகிரங்கமாக பேசியிருக்கின்றனர் எனவும், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர். எஸ். எஸ். இந்து முன்னணி உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள இந்து விரோத ஸ்டாலின் அரசு இந்த போராட்டத்திற்கும் அனுமதி மறுத்துள்ளது, இது அவமானகரமானது என தெரிவித்தார். ஸ்டாலின் அரசால் இரண்டாம் தர குடிமக்களாக இந்துக்கள் நடத்தப்படுகின்றனர் எனவும், இதை தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் 2026ல் திமுக கூட்டணி வேரோடு நீக்கப்பட வேண்டும் எனவும், இந்த அரசு இந்து விரோத அரசாக , இந்து கோவில் சொத்துக்களை கொள்ளை அடிக்கிற அமைப்பாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு சர்வதேச அளவில் ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்திய பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், மத்திய அரசு நட்பு நாடுகளுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் எனவும் எச்.ராஜா தெரிவித்தார். இதனையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.









