• Mon. May 13th, 2024

பேருந்து நிலையத்தில் குறைபாடுகள்- மத்திய இணையமைச்சர், ஆணையாளருக்கு உத்தரவு…

ByKalamegam Viswanathan

Jun 28, 2023

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார் பேருந்து நிலைய மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதி நவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 2021ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும், 450 கடைகள் இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்ட நிலையில் முதல்கட்டமாக பேருந்து நிறுத்தம் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தினை மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சர் நாராயண சுவாமி, மாநகராட்சியின் ஆணையாளர் பிரவீன்குமாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது பேருந்து நிலையத்தில் கழிவறை, குடிநீர் வசதி முறையாக இல்லாமல் இருந்தது. மேலும் பேருந்து நிலையத்தின் தடுப்புகள் உடைந்து இருந்தன. இதனை பார்வையிட்ட அமைச்சர் நாராயணசுவாமி பேருந்து நிலைய கட்டிட பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப, மாநகராட்சி ஆணையரிடம் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.
மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடப் பணிகள் 2 மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய்க்கு மதுரையில் பணிகள் நடந்துள்ள நிலையில், 170 கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தின் பணிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் கட்டிடப் பணிகளை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வரும் சூழலில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருக்கிறது, குடிநீர் வசதி போதியதாக இல்லை பயணிகளின் அடிப்படைத் தேவையான இரண்டையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *