• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்..!

ByKalamegam Viswanathan

Dec 13, 2023

சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ரத்ன விலாஸ் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வணிக நிறுவனத்தின் மாடிப் பகுதியில், எஸ்எம்சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி லிமிடெட், மத்திய அரசு முழு அனுமதி பெற்றது, டெல்லி, என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நசீர்அகமது (50) என்பவர் நிதி நிறுவனத்தின் மேலாளராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் 15 பேர் பணம் வசூலிக்கும் முகவர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தினசரி சந்தா பணம் கட்டினால் ஓராண்டு முடிவில் அதிக வட்டியுடன் பணத்தை திரும்பத் தருவதாக கூறியுள்ளனர். மேலும் டொசிட் செய்யும் பணத்திற்கு அதிக வட்டியுடன், தங்க காசு தருவதாகவும் கூறியுள்ளனர். வீடுகள், கடைகளில் தினசரி 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வீதம் முகவர்கள் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. தினசரி சந்தா தொகையாக 700 பேரும், 300 பேர் டெபாசிட் தொகை செலுத்தியவர்கள் என்று மொத்தம் ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் முதிர்வு பெற்ற சீட்டுக்கு உரிய பணத்தை தராமல் காலதாமதம் செய்துள்ளனர். முதிர்வு பெற்ற தொகையே பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த வாடிக்கையாளர்கள் சிலர் இன்று, இந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு உடனே தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று, நிதி நிறுவன மேலாளரிடம் விசாரணை நடத்தினர். தங்களிடம் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் பணத்தை முழுவதுமாக திருப்பிக் கொடுத்து விடுவோம் என்று மேலாளர் நசீர்அகமது, போலீசாரிடம் உறுதியளித்தார். இதனையடுத்து அங்கு திரண்டு நின்றிருந்த வாடிக்கையாளர்களை போலீசார் சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.