• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கூரன் ‘திரைப்பட விமர்சனம்

Byஜெ.துரை

Mar 2, 2025

கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கூரன்’

இத் திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.கூரன் என்றால் அறிவுக் கூர்மையானவன் என்கிற பொருள்படும். இந்தப் படம் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி உள்ளது. அந்த நாயின் அறிவுக் கூர்மையைக் குறிப்பிடும் வகையில்தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற நீதிபதியான ஓய்.ஜி. மகேந்திரன் தனது வாழ்க்கை அனுபவங்களை ஒரு நேர்காணலில் கூறுவதாகப் படம் தொடங்குகிறது.

அவர் தீர்ப்பு கூறிய வழக்குகளில் முக்கியமான, மறக்க முடியாதது எது என்கிற போது அவர் ஒரு வழக்கைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். அது ‘ஒரு தாய் தனது குழந்தையைச் சில ஆணவக்காரர்களின் வாகனத்தால் அடித்துக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்ட பயணம் ‘என்கிறார்.தாய் என்றதும் நேர்காணல் செய்பவர் மனிதரின் கதை என்று ஒரு பெண்மணியை நினைத்துக் கொள்கிறார்.அவரது பார்வையில் ஒரு பெண் காவல் நிலையம் வருவதாகக் காட்சி வருகிறது. ஆனால் பிறகு அது ஜான்சி என்ற பெயர் கொண்ட ஒரு நாய் என்று பார்வையாளர்களுக்குப் புரியும்படி கதை செல்கிறது.

கொடைக்கானலில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒரு குடிகாரக் கும்பல் காரை விட்டு ஏற்றிக்கொன்று விட்டுப் பறந்து செல்கிறது. அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது.தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது, அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. இருந்தாலும் அங்கேயே படுத்துக் கொள்கிறது. அதன் பிறகு வழக்கறிஞர் எஸ். ஏ. சந்திரசேகர் வீட்டுக்குச் செல்கிறது.

காவலாளி அங்கேயும் அதை விரட்டி அடிக்கவே, மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது.அதைக் கவனித்த எஸ் .ஏ. சி அது ஏதோ சொல்ல விரும்புகிறது என்று அதன் உணர்வுகளைக் கவனிக்கிறார் .அது வாயில்லா ஜீவன் என்றாலும் அது தனது கதையை அவர் உணரும்படிச் செய்கிறது.அதைத் தொடர்ந்து சென்று, குட்டியை இழந்த அதன் கோபத்தையும்,சோகத்தையும் புரிந்து கொள்கிறார்.
தர்மராஜ் என்கிற புகழ் பெற்ற வழக்கறிஞராக இருக்கும் எஸ்.ஏ.சி , அந்த நாய்க்காக வாதாட வருகிறார். பல்லாண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடாமல் இருந்தவர், அந்த நாய்க்காக களத்தில் இறங்குகிறார்.அதன் கண்ணீருக்கு நியாயம் கிடைக்கச் செய்வதாக அந்த நாயிடம் உறுதியளிக்கிறார். அதன் குட்டியை இரக்கமில்லாமல் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கும் அவர் போராடுகிறார் .

இறுதியில்வாயில்லா ஜீவனின் குரலுக்கு நீதி கிடைத்ததா? அதற்கு அவர் என்ன செய்கிறார்? என்கிற போராட்டத்தின் பயணம் தான் இந்த 110.27 நிமிடக் ‘கூரன்’ படத்தின் கதை.திரைப்படங்களில் விலங்குகளை மையப்படுத்தி ஏராளமான கதைகள் வந்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு விலங்குகள் செயல்படுவது போல் தான் இருக்கும். ஆனால் இதில் அந்த நாயின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மனிதர்கள் செயல்படுவது போல் காட்சிகள் உள்ளன. எனவே இதனை வித்தியாசமான கதையாக உணரலாம்.

படத்தின் கதை தொடங்கிச் செல்லச் செல்ல ஒரு நாயின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் சென்று சேரும்படி எப்படிக் காட்டுவார்கள் என்கிற ஒரு கேள்வி நமக்குள்ளே எழுகிறது.
ஆனால் போகப் போக அடுத்தடுத்த காட்சிகளில் அதற்குரிய பதில் கிடைத்து விடுகிறது.காட்சிகள் நகர நகர அந்த நாயுடன் நாமும் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம் .அந்த நாய் ஏன் இவ்வளவு அறிவாக இருக்கிறது என்று யோசித்துப் பார்க்கும்போது அதற்கு ஒரு முன் கதை விரிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் பைரவா என்கிற பெயரில் தீவிரமான துப்பு துலக்கும் நாயாக அது இருக்கிறது.குற்றவாளிகளை மோப்பம் பிடித்துக் கண்டுபிடிப்பதில் புத்திசாலியாக இருந்தாலும் அங்கேயும் அதன் வாழ்க்கையில் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறது. அதை அரவணைத்து வளர்க்கும் சரவண சுப்பையா அதன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதைக் காப்பாற்றுவதற்காக எங்கேயாவது சென்று பிழைத்துக்கொள் என்று காட்டுக்குள் துரத்தி விடுகிறார். அப்படித் தப்பி வந்த நாய் தான் கொடைக்கானலுக்கு வருகிறது என்று பிளாஷ்பேக் முடிகிறது.

அப்படிச் சென்று தான் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இறந்த தனது குட்டிக்காக அந்த நாய் முறையிடுகிறது.படத்தின் முதல் பாதி சற்றே மிதமான வேகத்தில் பயணிக்கிறது என்றாலும் இரண்டாம் பாதியில் அந்த வழக்கு நீதிமன்றத்தை அணுகும் போது கதையில் சூடு பிடிக்கிறது. அதன்பிறகு பரபரவென படம் நகர்ந்து முடிவை எட்டுகிறது.கூரன் படத்தில் வழக்கறிஞர் தர்மராஜ் என்கிற பாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார்.நடிகராக அவர் தோன்றிய படங்களில் இதைக் குறிப்பிடத்தக்க பாத்திரம் என்று கூறலாம்.அவரது மிடுக்கான தோற்றம், பொருத்தமான உடல் மொழி, வசன உச்சரிப்பு, மிகையற்ற பாவனைகள் அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டுகின்றன.ஒரு நடிகராக இனி அவர் இது மாதிரி தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் நடிக்கலாம்.

நீதிமன்றக் காட்சிகளில் வாதப் பிரதிவாதங்கள் , தண்டனைச் சட்டங்கள் ,சட்ட உட்பிரிவுகளைப் பற்றி எல்லாம் காட்சிகள் வரும் போது எஸ்.ஏ. சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை,நீதிக்கு தண்டனை போன்ற பழைய படங்களின் நீதிமன்றக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.அதே பரபரப்பான எஸ். ஏ . சந்திரசேகரை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது.காரை நாயின் மீது ஏற்றிக்கொன்ற ரஞ்சித் ராஜாவின் தந்தையாக கவிதா பாரதி வருகிறார் வழக்கம்போல எதிர்மறை நிழல் விழுந்த பாத்திரம்.கேலிப் பேச்சு, எரிச்சலூட்டும் உடல் மொழி என்று அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்காக வாதாடும் வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல் வருகிறார். வழக்கின் முக்கியத்துவம் கொண்ட எதிர்பாராத பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார் .நாயின் குரைப்பு ஒலியை மொழிபெயர்க்கும் பாத்திரத்தில் சத்யன் வருகிறார்.
எஸ். ஏ. சந்திரசேகருடன் குருவே குருவே என்று கூடவே இருக்கும் பெண்ணாக இந்திரஜா ரோபோ சங்கர் நடித்துள்ளார்.நகைச்சுவை இல்லாத குறையை அவரது பேச்சாலும் தோற்றத்தாலும் ஈடு செய்ய முயன்றுள்ளார்.இப்படி நடிப்புக் கலைஞர்கள்
அனைவருமே தங்கள் பணியைக் குறையில்லாமல் செய்துள்ளனர்.இந்தப் படத்தில் கவர்ச்சி காட்சிகள், குத்தாட்டம், மலிவான நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் ,வெட்டு, குத்து ,ரத்தம் போன்ற எதுவும் இல்லாமல் இருப்பதே பெரிய ஆறுதலாக இருக்கிறது.

இந்தப் படத்தில் விலங்குகள் கொலை செய்யப்படுவதைத்தடுக்கவும் தண்டிக்கவும் மனிதருக்கான சட்டங்கள் பொருந்துமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. அதற்கான சட்டப்பிரிவுகளும் சொல்லப்படுகின்றன. அதன்படி விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை சார்ந்த பிரிவு 428 மற்றும் 429 -ன்படி குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்குவதாகப் படத்தில் கூறப்பட்டுள்ளது.நீதிமன்றங்கள் கண்ணால் கண்ட சாட்சியை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனவா?நீதி விசாரணையின் போது உணர்வுகளுக்கான இடம் இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு ஆதாரமாக உரிய பதில் சொல்லப்படுகிறது.

படத்தில் பேசப்படும் சட்ட நுணுக்கங்களை எல்லாம் பார்க்கும் போது எஸ் .ஏ. சந்திரசேகரின் பங்களிப்பை உணர முடிகிறது.படத்தில் ஜார்ஜ் மரியான் பாத்திரத்தின் மூலம்ஈஎஸ்பி எனப்படும் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன் பற்றி அதாவது
ஐம்புலன்களைத் தாண்டி அறியும் ஆறாவது உணர்வைப் பற்றியும்,அதனால் செவி வழியே கேட்கும் குரல்களை வைத்து படிமங்களை வரையும் திறமை பற்றியும் பேசப்படுகிறது.இது கதையின் திருப்பு முனையாக எப்படி அமைகிறது என்பதற்கும் காட்சிகள் உள்ளன.

கொடைக்கானல்,மலைப்பிரதேசம் என்கிற பின்புலம் பசுமையும் நீலமும் கலந்து காட்சிப்படுத்தலுக்கு ஏற்றதாக அமைந்து காட்சிகள் கண்களுக்குக் குளிர்ச்சியாக உள்ளன. மார்டின் தன்ராஜ் செய்துள்ள ஒளிப்பதிவில் குறை ஒன்றும் இல்லை.பிசிறு தட்டாத வகையில் படத்தொகுப்பு செய்துள்ளார் மாருதி.படத்தொகுப்புப் பணியை மேற்பார்வை செய்துள்ளார் பீ. லெனின்.ஒரு நாய் பற்றிய கதையாக இருந்தாலும் அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நன்றாகவே பின்னணி இசையைச் சேர்த்துள்ளார் சித்தார்த் விபின். அதுமட்டுமல்ல இனிமையான பாடல்களும் உண்டு. படத்தின் கதைப் போக்குக்குத் தடையாக இருக்கும் என்று சுருக்கமாக ஒலிக்கின்றன.மொத்தத்தில் விலங்குகளும் மனிதர்களைப் போன்றவை தான், அவற்றுக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு .தான் வாழ்வதற்காக மனிதன் அதை அழிக்கக்கூடாது, துன்புறுத்தக் கூடாது என்கிற கருத்தை நாகரிகமாகக் கூறி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘கூரன்’ கூர்மை