பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, இந்திய–ஜப்பான் கலாச்சார நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பான ஜப்பானிய தேநீர் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் தூதரகத்தின் கலாச்சார பிரிவு உறுப்பினர் மாமி டெரோகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார். பள்ளியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், இயக்குநர்கள், முதல்வர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

ஹயகாவாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தேநீர் ஆசான் யூகோ ஷிமிசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஜப்பானிய மரபுப்படி தேநீர் தயாரிப்பு, பாரம்பரிய தின்பண்டங்கள் வழங்கல் மற்றும் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நல்லிணக்கம், மரியாதை, நினைவாற்றல் போன்ற ஜப்பானிய பண்புகளை மாணவர்கள் நேரடியாக அனுபவித்து மகிழ்ந்தனர்.
விழாவில் பேசிய தூதரக உறுப்பினர், “பிற நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை மதித்து கற்றுக்கொள்ளும் மாணவர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாச்சாரம் முக்கியமானது; இரு நாடுகளிலும் தேநீர் ஒரு பாரம்பரியம். அதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஜப்பானிய தேசிய கீதத்தை மாணவர்கள் அழகாகப் பாடியதற்காக என் பாராட்டுகள்,” என தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ஆர்த்தி கணேஷ், “இந்த ஆண்டின் மையக் கருத்தாக ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை கொண்டு, உலகளாவிய கலாச்சாரம், மொழி, பண்பாடுகளை மாணவர்கள் அறிந்து மகிழும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஜப்பான் கலாச்சாரத்தை அறியும் ஜன்னலாக இந்த தேநீர் விழா அமைந்தது. மேலும், எங்கள் பள்ளியில் ஜப்பான் மொழி கற்பிக்கப்படுகிறது. ஜப்பான் தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் ஜப்பானுக்கு சென்று அந்நாட்டு மொழி, கலாச்சாரம், பண்பாடுகளை நேரடியாகக் கற்றுக்கொள்வார்கள்,” என கூறினார்.
இந்திய–ஜப்பான் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கலாச்சார விழா, மாணவர்களுக்கு உலகளாவிய பார்வையையும் பண்பாட்டு புரிதலையும் வழங்கிய ஒரு நினைவுகூரத்தக்க நிகழ்வாக அமைந்தது.






