தமிழக சட்டசபையில், 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி மாணவ அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகைசெய்யும் 2 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று (ஜன.11) நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய குற்றங்களுக்கு பிஎன்எஸ் மற்றும் தமிழக அரசு சட்டங்களின் கீழ் ஏற்கெனவே தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகக் கூறி, இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்க, பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் ஆகிய சட்டங்களில் மாநில சட்ட திருத்தத்துக்கும், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் தமிழ்நாடு 1998-ம் ஆண்டு சட்ட திருத்தத்துக்கும், சட்ட மசோதாக்கள் நேற்று பேரவை ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.