பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னதாக, தீர்ப்பை ஒட்டி கைதான 9 பேரும் இன்று (மே 13) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று (மே.13) காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு குறித்து அரசு தரப்பு சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழகமே எதிர்பார்த்திருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் கூட்டு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு மற்றும் மீண்டும், மீண்டும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஒருவர்கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை. குற்றவாளிகள் 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும்.
குற்றவாளிகள் தரப்பில் அனைவருமே இளம் வயதினர், சிலருக்கு இன்னும் திருமணமாகவில்லை, சிலருக்கு வயதான பெற்றோர் உள்ளனர், பெற்றோரை பாதுகாக்கும் ஒற்றை வாரிசாக உள்ளனர் என்ற காரணங்களை முன்வைத்து தண்டனை குறைப்பு கோருவார்கள். ஆனால், அரசுத் தரப்பில் அனைவருக்குமே சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சபட்ச தண்டனையைக் கோரியுள்ளோம். இது ஓர் அரிதான வழக்கு. மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சார்ந்தது. அதனால் நாங்கள் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம். இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றத்தை எவரும் செய்யாத வகையிலான அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும், ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.” என்றார்.
இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி நந்தினி தேவி.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
