மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், உள்ள சாலைகள் பலத்த மழையால் குளம் போல மாறி உள்ளன.
மதுரை அண்ணா நகர், கோமதிபுரம், யாகப்பா நகர், தாசில்தார் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளன. இவ்வாறு தேங்கியுள்ள மழை நீர் வழியாகத்தான், பொது
மக்களும், இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் செல்கின்ற அவல நிலை ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் பலர் தேங்கியுள்ள மழை நீரில் விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறதாம். இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர், உதவி ஆணையாளர், மாநகராட்சி கவுன்சிலர் ஆகியோர் கவனத்தை கொண்டு சென்றும், மதுரை மாநகரில் குளம் போல தேங்கியுள்ள சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்டு விளைய என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர்,சித்தி விநாயகர் கோவில் தெருவில், கடந்த ஆறு மாதங்களாக சாலையில் மிகவும் மோசமாக நிலை உள்ளது. இச்சாலையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மதுரை யாகப்பா நகர், எம்ஜிஆர் தெருவில், மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.

அத்துடன், மதுரை மருது பாண்டியர் தெரு, தாசில்தார் நகரில் உள்ள சௌபாக்கியா கோயில் தெரு, காதர் மொய்தீன் தெரு, மதுரை கோமதிபுரம் ஆறாவது மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், பொதுமக்களும் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், மிகவும் அவதி அடைகின்ற நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கியுள்ள நீரை வானங்கள் மூலமாக அகற்றி, பொதுமக்கள் செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
