• Fri. Apr 26th, 2024

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன ஃபிரெஷர்கள் பார்ட்டி – மருத்துவ கல்லூரியில் அவலம்

Byமதி

Nov 27, 2021

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்திருக்கும் இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாணவர்கள், பேராசிரியர்கள் என 182 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பிரெஷ்சர்ஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்த சில தினங்களுக்கு பின்னர் அக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவியதால், சந்தேகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் சுமார் 300 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவுகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் நேற்று வரை அந்த கல்லூரியின் ஃபிரெஷர்கள் பார்ட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், பேராசிரியர்கள் என 66 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்றைய நிலவரப்படி இந்த பாதிப்பு 66ல் இருந்து ஒரேயடியாக 182 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் என தெரியவந்திருக்கிறது. மேலும் இதில் பலரும் அறிகுறிகள் இன்றியும், சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரியின் இரண்டு விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் நடைபெற்ற ஃபிரெஷர்கள் பார்ட்டி கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறி பரவலுக்கு வித்திட்டுள்ளதாக தர்வாத் சுகாதாரத்துறை கமிஷனர் தெரிவித்தார். இன்று மேலும் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த இருப்பதாகவும் இதன் முடிவுகள் வெளியாகும் போது பாதிப்பின் அளவு மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை சேகரித்து மரபணு சோதனைக்காக அனுப்பி வைத்து இதில் யாருக்காவது புதிய வகை கொரோனா வேரியண்ட் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியும் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *