மதுரை மாவட்டம், டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் வரும் 28.11.2025 முதல் 10.12.2025 தேதி வரை 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை நடைபெறுவதை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவிக்கையில்,
தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டியில், மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளில் மோதவுள்ளன. நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மொத்தம் 72 போட்டிகள், மதுரை மற்றும் சென்னை என இரண்டு நகரங்களில் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்க உள்ளன.
மதுரை மாநகராட்சி சார்பில் விளையாட்டு வீரர்கள் தங்கும் இடங்கள் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களில் தடையற்ற நீர் விநியோகம், சாலை பழுதுபார்ப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். காவல் துறை சார்பில் முழுமையான பாதுகாப்பு, கூட்டக் கட்டுப்பாடு, வி.ஐ.பி பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தீயணைப்புத்துறை சார்பில் அனைத்து இடங்களிலும் தீ பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் முதலுதவி நிலையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்கள் தங்குமிடம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியம் சார்பில் சாலைகள், அரங்குகள், மின் வசதிகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு, தடையற்ற மின்சாரம் வழங்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வித் துறை மற்றும் கல்லூரி இயக்ககம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளை காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்து, சர்வதேச அளவில் தமிழ்நாட்டின் மதிப்பை உயர்த்தும் வகையில் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ள இடத்தை தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஷ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தலைவர் ஜெ.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.