பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் V. வெங்கடேசனை ஆதரித்து, பிரம்மாண்டமான தேர்தல் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, அதிமுக நிர்வாகிகள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், டி.கே.எம். சின்னையா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், கடந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனான தனது நட்பு குறித்து நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், வரி உயர்வுகள் மக்களுக்கு சுமையாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்த தேர்தல் மாற்றத்திற்கான முக்கிய வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி மீது நம்பிக்கை இருப்பதாகவும், கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒருமித்துப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ரவி பச்சமுத்து, பல்லாவரம் தொகுதி கூட்டணிக்கு சாதகமானது என்றாலும் எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது எனக் கூறினார். வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இளைஞர்களை ஈர்க்க சமூக ஊடகங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், கூட்டணி தலைவர்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தால் வெற்றி உறுதி என நம்பிக்கை தெரிவித்தார். ஒற்றுமையுடன் செயல்பட்டு, வேட்பாளர் வெங்கடேசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தின் இறுதியில், தொண்டர்கள் அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுத்து, வேட்பாளர் வெங்கடேசனை வெற்றி பெறச் செய்வோம் என உறுதி மேற்கொண்டனர்.
மேலும் பல்லாவரம் சட்டமன்ற வேட்பாளர் வெங்கடேசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை என்னால் இயன்றவரை செய்து கொடுப்பேன் என தெரிவித்தார்.




