விஜய்க்கு ஏன்?
ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் செல்கிறார்.
இதன்முதல் கட்டமாக 13 ஆம் தேதி திருச்சியில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதற்காக காவல்துறையிடம் அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த கடந்த வாரம் திருச்சிக்கு சென்றார். அப்போது அவர் கூட்டம் கூட்டியதாகவும் போலீசாருக்கு நெருக்கடி தந்ததாகவும் அவர் மீதே வழக்குகள் போட்டது திருச்சி போலீஸ்.
ஆரம்பமே இப்படி போலீஸின் கசப்புணர்வைக் காட்டிய நிலையில், விஜயின் மக்கள் சந்திப்புப் பயணத்துக்கு எடுத்த எடுப்பிலேயே அனுமதி மறுத்தது போலீஸ்.
.
திருச்சி காவல் ஆணையர் என். காமினியை செப்டம்பர் 6, 2025 அன்று சந்தித்த ஆனந்த், சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி கோரினார் புஸ்ஸி ஆனந்த்.
அப்போது, பொது இடத்தில் பிரச்சாரம் செய்வது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று கூறி, மாற்று இடத்தை பரிசீலிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரக்கடை பகுதியில் மாற்று இடத்தை ஆய்வு செய்தனர். ஆனால் அந்த இடமும் மறுக்கப்பட்டதாக தவெகவினர் தெரிவித்தனர்.
திருச்சியில் தொடங்கி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர இருக்கும் இந்த சுற்றுப் பயணத்தில்… ஆரம்பத்திலேயே அதாவது திருச்சியிலேயே விஜய்க்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளனர் போலீஸார்.
திருச்சி மாநகர காவல்துறை விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
· பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தை விட்டு வெளியே வரக் கூடாது.
· பிரசார வாகனத்தின் மீது நின்றுகொண்டு, சாலை வலம் அதாவது ரோடு ஷோ செல்லக் கூடாது.
· விஜய் வாகனத்தின் பின்னால் 5 அல்லது 6 வாகனங்களுக்கு மேல் செல்லக் கூடாது.
· விஜய் பிரசார வாகனத்தில் அமர்ந்தபடியே வர வேண்டும். நின்றுகொண்டு கையை அசைத்தபடி வரக்கூடாது.
· அனுமதி அளிக்கப்படும் இடங்களில் விஜய் 25 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும், அதற்கு மேல் பேசக் கூடாது…
· சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது.
· செப்.13 அன்று முற்பகல் 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேச அனுமதி, அதற்கு மேல் பேசக் கூடாது…
· பெரிய குச்சிகளில் இணைக்கப்பட்ட கொடிகளைக் கொண்டு வரக் கூடாது.
· மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளை கூட்டத்துக்கு அழைத்துவரக் கூடாது.
· தீயணைப்பு மற்றும் மருத்துவ உதவிகளையும் தவெகவே செய்திட வேண்டும்.
· மக்கள் மற்றும் வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது
· என ஏகப்பட்ட கூடாதுகளை நிபந்தனைகளாக போட்டிருக்கிறார்கள் போலீஸார்.
‘தவெக மீது இருக்கும் பயத்தால்தான் ஆளுங்கட்சி இப்படி அடக்குமுறைகளை கையாள்கிறது என்று விஜய் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது,
“விஜய் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார். வொர்க் ஃப்ரம் ஹோம் பாலிடிக்ஸ் செய்கிறார் என்று திமுகவினர் விமர்சனம் செய்கிறார்கள்.
சரி நான் வெளியே வருகிறேன் என்று விஜய் வெளியே வந்தால், இதுவரை யாருக்கும் விதிக்காத கண்டிஷன்களை எல்லாம் போட்டு விஜய்யை முடக்கப் பார்க்கிறார்கள்.
போலீஸ் கூறும் பல நிபந்தனைகளை நடைமுறையில் பின்பற்றவே முடியாது. ஆனாலும் இந்த விதிமுறைகளை இரு மாதமாக பிரச்சாரம் செய்யும் எடப்பாடிக்கு ஏன் ஸ்டாலின் லோலீஸ் விதிக்கவில்லை? ஏனென்றால் ஸ்டாலினுக்கு விஜய்யை பார்த்துதான் பயம்” என்கிறார்கள்.
திருச்சியில் மட்டுமல்ல அடுத்தடுத்த மாவட்டங்களிலும் பல கூடாதுகளை விஜய்க்கு நிபந்தனைகளாக விதிக்கிறது போலீஸ்.
ஆனால் விஜய்ய்க்கு கூடும் கூட்டம் இந்த கூடாதுகளை எல்லாம் பொய்யாக்கிவிடும் என்பதே நிஜ நிலவரம்!
